முருகனை மணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக சிவபெருமானை வள்ளிதேவி பலவிதமான மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தாள். அதனால் இத்தலத்திற்கு 'வள்ளியறச்சாலை' என்று பெயராயிற்று என்பர். வள்ளிதேவியின் தவமும், அர்ச்சனையும் பல காலம் நீட்டித்தது,வள்ளி அர்ச்சனை செய்த மலர்கள் ஒரு மலைபோல் குவிந்தது.அதுவே'புஷ்பகிரி' ஆயிற்று என்பர்.புஷ்பகிரி வள்ளியறச்சல் கிராமத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.அங்கு முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.'வேலாயுத சுவாமி' என்று அழைக்கப் பெறுகிறார்.

'புஷ்பகிரி' சிறு குன்று. அழகான நந்தவனம் இடையில் அமைந்துள்ளது.கோயிலில் அறுபடை வீடு ஓவியங்களும்,முருகப் பெருமானோடு தொடர்புடைய வரலாற்று ஓவியங்களும் திகழ்கின்றன.

கொங்கு நாட்டு மலைகளைக் குறிக்கும் போதும்,காங்கய நாட்டு மலைகளைக் குறிக்கும் போதும் புஷ்பகிரி சிறப்பாகக் குறிக்கப் பெறுகிறது.மடவளாகம் லட்சுமண பாரதி புஷ்பகிரியைப் புகழ்கின்றார்.

அடியார்கள்,
'அருள்மேவு புஷ்பகிரி அதனில்நிலை நின்றுண்மைப்
பொருள்மேவி வளர்ந்திலகு புண்ணியனாம்-திருக்கமழும்
கந்தா கலிதீர்கும் கற்பகமே அடியேனை
வந்தாள் சரவண பவ'
என்று பாடிப் பரவி புஷ்பகிரி வேலாயுத சுவாமியை வணங்கி வருகின்றனர்.புஷ்பகிரிகொங்கு நாட்டுக் குன்றுதோறாடல் திருத்தலங்களில் ஒன்றாகும்.