வள்ளியறச்சல் காணியாளர்களின் குலதெய்வக் கோயிலாக விளங்குவது அழகு நாச்சியம்மன்கோயில்.இக்கோயில் அம்மனைப் பொன் அழகு நாச்சியம்மன் என்று சிறப்புடன் அழைப்பர்.

மெக்கென்சி ஆவணத்தில் கீழ்வருமாறு அம்மன் பெயர்க்காரணம் கூறப்படுகிறது.

"திறேதா யுகத்தில் காளியானவள் ஈசுவரனிடம் வாதம் பண்ணி ஈசுவரனுடனே நடன்ஞ்செய்து அபஜெயப்பட்டு அந்த சிவ அபராதத்துக்காக மாந்தபுரத்திலே வந்து பூசை பண்ணினாள்.செளந்தர்யம் பெற்ற அதனாலே செளந்தர்யபுரம் என்றும் சுகந்தவனம் என்றும் சவுந்தர்ய மாந்தீசுவரர் என்றும் பேர் வரப்பட்டது. அந்தக் காளி ஈசுவரனைப் பூசை பண்ணினபடியினாலே சொர்ண அழகு பெற்றதால் அழகு நாச்சியம்மனென்று பெயர் ஏற்பட்டது" என்பது ஆவணப் பகுதி.

வள்ளியறச்சலுக்கும், 'பொன்' என்ற அடைமொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. துவாபர யுகத்தில் 'பொன் உடும்பு' மோட்சார்த்தமாகச் சிவனை பூசை செய்த இடம் இவ்வூர் என்பர். அதனால் இவ்வூருக்குச் 'சொர்ணபுரம்'என்று பெயராயிற்று என்பர். தீர்த்தம் 'இரணிய தீர்த்தம்' என்றும் கூறுவர்.சொர்ண்ம்,இரணியம் என்ற சொற்கள் பொன்னைக் குறிக்கும்.அதனால் அம்மனுக்குச்'சொர்ணாம்பிகை' என்ற பெயரும் எற்பட்டது.'சொர்ண அழகு நாச்சியம்மன்' என்று 1807 - ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆவண்ம் கூறுகிறது.அப்பெயரே பொன் அழகு நாச்சியம்மன் என மாறியது.

அம்மன் கோயில் முகப்பில் மண்டபத்துடன் கூடிய தீபத் தம்பத்தின் மேற்குப் பக்கம் உள்ள கல்வெட்டு கூறுகிறது.தென்புறம் நல்லதம்பிக் கவுண்டர் என்ற பெயர் காணப்படுகிறது.வடபுறம் ஒரு தலைவரின் உருவம் உள்ளது. அது தீபத் தம்பம் அமைந்த நாட்டாக் கவுண்டருடையதாக இருக்கலாம்.இவர் சிவமலைக் குறவஞ்சியில் குறிக்கப்பட்டுள்ளார்.

நுழைவாயில் உள் நுழைந்தவுடன் இரண்டு குதிரைகள் கம்பீரமாக நிற்பதைக் காணலாம். கிழபுறம் பிரகாரத்தில் வரிசையாகக் காணியாளர்கள் உருவச்சிலைகள் உள்ளன. கோவிலுக்கு வரும் காணியாளர்கள் தத்தம் குல முதல்வரை வணங்கிச் செல்லுகின்றனர். பரிவட்டம், மாலை சாத்தி முன்னோரை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும்.கொங்கு வேளாண் பெருமக்கள் தங்கள் முன்னோர் உருவச்சிலைகளுடன் வேட்டுவர், பண்டாரம், சிவாச்சாரியார் உருவச்சிலைகளையும் வைத்திருப்பது அவர்களின் சமூக ஒருமைப் பாட்டைக் காட்டுகிறது.

கருவறை,அர்த்த மண்டபம்,மகா மண்டபம் பழைய கல் திருப்பணி.1945-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவின் போது முன்மண்டபம் கட்டப்பட்டது.

கருவறையில் வேண்டுவார்க்கு வேண்டிய வரம் அருளும் பொன் அழகுநாச்சியம்மன் எட்டுத் திருக்கரங்களோடு வீற்றிருந்து அருள் புரிகின்றாள்.

1945-இல் வழிபாட்டுக்குரிய புதிய அம்மன் சிலை பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.பழைய அம்மன் சிலை மகா மண்டபத்தில் வைக்கப்பட்டுப் பூசையும் நடந்து வருகிறது சிறப்புக்குரியது.

அம்மனின் வலப்புற்க் கரங்களில் வேல்,உடுக்கை,வாள்,குறுவாள் உள்ளன.இடப்புறக் கரங்களில் அக்கினி,கேடயம்,மணி,கபாலம் உள்ளது.

சிவாச்சாரியாரும்,பண்டாரங்களும் பூசை செய்கின்றனர். தை மாதம் முதல் புதன்கிழமை பூச்சாட்டி 15 நாள் உற்சவம் நடைபெறுகிறது.உற்சவத்தில் தேர் கோயிலைச் சுற்றியுள்ள திருவீதியில் உலா வரும்.மக்கள் திரளாக தரிசிப்பர்.

கருப்பண்ணசுவாமி சந்நதி கோயிலுக்குக் கீழ்புறம் வெளியே மேற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.கோயிலுக்குள் உயிர்ப்பலி இல்லை.

பொன்னுக்கும் வள்ளியறச்ச்லுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.இவ்வூருக்குச் சொர்ணபுரம் என்றோர் பெயர் உண்டு,சொர்ணம் என்றால் பொன்.இங்குள்ள புண்ணியத் தீர்த்தங்களுள் ஒன்று இரணிய தீர்த்தம்,இரணியம் என்றாலும் பொன் தான் மாந்தீசுவரர் கோயில் அம்மன் பெரிய நாயகி.பெரிய நாயகிக்கு 'சொர்ணாம்பிகை' என்ற பெயரும் உண்டு.மாந்தீசுவரருக்கும் பொன்மாந்தீசர்,சொர்ணமாந்தீசர் என்றும் பெயர் உண்டு.

துவாபர யுகத்தில் பொன் இடும்பு சிவனைப் பூசை செய்து சாபவிமோசனம் பெற்றது. அதனால் தான் சொர்னபுரம்,இரணிய தீர்த்தம் என்று பெயர் ஏற்ப்பட்டதாம்.ஊர்ப் பெயர், தீர்த்தம் பொன் தொடர்பான பெயர் பெற்றதால் அம்மனும் சொர்ண அழகு நாச்சியம்மன் என்று பெயர் ஏற்பட்டதாம்.பின் அப்பெயர் பொன்னழகு நாச்சியம்மன் என்று பெயர் மாற்றம் பெற்றது.

பொன் -அழகு - நாச்சி என்ற சொற்கள் மிகவும் சிறப்பான செய்திகளைத் தருவன.

பொன்:
மக்கள் பயன்படுத்தும் உலோகங்களில் பொன் தலைமையும் உயர்வுமாய் மதிக்கப்படுவது பொன் நகையை விரும்பாதவர் யார்?

பொன்னின் உயர்வு தாழ்வுக்கு அளவுகோல் உண்டு.அதை 'மாற்று' என்பர்.10 1/2 மாற்றுக்குமேல் உள்ள பொன்னே உயர்ந்ததாகும்.இதை பசும்பொன் என்பர்.

பொன்னில் நான்கு வகை உண்டு,அவை சாதரூபம்,சாமபூந்தம்,கிளிச்சிறை, ஆடகம் எனப்படும். அவை ஒவ்வொன்றுக்கும் தனிதனித் தன்மைகள் உண்டு.பொதுவாகச் சிறந்த பொன்னான'ஆணிப்பொன்' என்பர்.சேரன் தலை நகரில் பொன்மயமான ஒரு மாளிகை 'ஆடகமாடம்' எனப்பட்டது. முதலாம் இராசராசனின் தந்தை இரண்டாம் பராந்தகன் ஆன சுந்தரசோழன்.அவன் பொன்மாளிகைத் துஞ்சிய தேவர் என்பர்.அப்பொன் மாளிகை காஞ்சிபுரத்தில் இருந்தது.

சிவபெருமான் நிறம் பொன்நிறம் என்பர்.அதனால் தான் சுந்தரர் சிவபெருமானைப் பொன்னார்மேனியன் என்று சிறப்பித்துப் பாடினார்.சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்ட ஒரு நூலின் பெயர் பொன் வண்ணத்தந்தாதி,இலட்சுமி தேவிக்கும் 'பொன்'என்ற பெயர் உண்டு.திருமால் மார்பில் இலட்சுமி உறைவதால் திருமால் 'பொன் துஞ்சும் மார்பன்' எனப்பட்டார். சமணதீர்த்தங்கரரின் இயக்கர்,இயக்கியர்கட்குப் பொன் இயக்கர்,பொன் இயக்கி என்று பெயர் வழங்குகிறது.தீர்தங்கரர் ஒரு பொன்னையில் நாதர் எனப்பட்டார்.

இந்திரன் நகர் அமராபதி 'பொன்னகர்' எனப்பட்டது.திருச்சி அருகே 'பொன்மலை'என்ற ஊர் உண்டு.கோவலன் கண்ணகியை பலவாறு புகழ்கின்றான்.முதல் புகழ்ச்சி 'மாசறு பொன்னே'என்பதாகும். எங்கும் பொன்னின் பெயரை இணைப்பது மக்களின் வழக்கம். சிறு கைத்தறி ஆடை அணிவித்தாலும் பெயர் பொன்னாடைதான்.ஐம்பதாண்டு விழவைப் 'பொன்விழா' என்பர் அண்ணன்மாரில் மூத்தவர் பொன்னர் எனப்பட்டனர்.ஆடவரும் பெண்டிரும் பொன்னால் பெயர் பெறுவர்.(பொன்னப்பன்,பொன்னம்மாள்).

சங்க இலக்கியத்தில் தோழி நல்லது செய்தால் தலைவி 'பொன் செய்தாய்' என்று பாராட்டுவாள்.தில்லை சிதம்பரத்தில் நடராசப் பெருமாள் எழுந்தருளியுள்ள இடம் 'பொன்னம்பலம்'.சிதம்பரம் கோயிலுக்குச் சோழன் பொன் மேய்ந்து'பொன்மேய்ந்த மகிபதி எனப்பட்டான்.

சிறந்த மலர்களான முல்லை,கொன்றை,பாதிரிப்பூக்கள்,பொன் முல்லை,பொன்கொன்றை,பொன்பாதிரி எனப்பட்டது.பொன்னின்சிறப்பால் இரும்பு 'கரும்பொன்'என்றும்,வெண்கலம் 'வெண்பொன்'எனப்பட்டது.பொன்னும் செம்பொன் எனப்பட்டது.மணிக்கற்களுக்கும் பொன் என்று பெயர் உண்டு.பொன்+க+ஊர் தான் பொங்கலூர் ஆயிற்று.காவிரிக்கும்,அதன் கிளையாறுகட்கும் பொன்னி,பொன்னியாறு என்று பெயர் உண்டு.பூந்துறை நாட்டில் பொன்மாரி பெய்தது என்பர்.

அழகு:
இயற்கையாகவும்,செயற்கையாகவும் கண்களைச் கவருவது அழகு.மக்களினம் பெரிதும் வரவேற்று விரும்பி மகிழ்வது அழகை கண்டுதான்.மரங்களும் செடிகொடிகளும் பூப்பது அழகு.பச்சை பசேல் என்ற மலைச்சூழலில் வெண்ணிறமான் அருவி வீழ்வது அழகு.நீல நிற வானில் வெண்மேகங்கள் பஞ்சு போலப் படர்ந்திருப்பது அழகு.அங்கு பறவைகள் வரிசை வரிசையாக அணிவகுத்துப் பறப்பது அழகு.விண்ணில் நட்சத்திரங்கள் புடைசூல முழுமதி இருப்பது அழகு.சூரியன் தோன்றுவதும் மறைவதும் கூடாழகுதான்.காக்கையின் கருமையான நிறத்தில் பாரதியார் அழகை கண்டார் உரையாசிரியர்கள்கூட கறுப்பின்கண் அழகு மிகுதி என்பர்.

அழகு என்ற சொல் மக்களினத்தைக் கவர்ந்த சொல்.அழகப்பன்,அழகுசுந்தரம்,அழகம்மாள் என்பன மக்கட் பெயர்கள் தேசிய விநாயகம் பிள்ளை "தேசூர் அழகம்மை ஆசிரிய விருத்தம்" என்ற நூல் பாடியுள்ளார்.மிகச்ச்றந்த வைணவத்தலமும்,மங்களாசாசனம் பெற்ற தலமும் 'அழகர்மலை' ஆகும்.அழகர் மலை அழகர் மதுரை வைகையில் இறங்குவது மிகப்பெரிய விழா,அட்ப்பிரபந்தத்தில் ஒரு நூல் 'அழகர் அந்தாதி'.கொற்கை அருகேயுள்ள தொல்பொருள் சிறப்பான இடம் 'அழகன் குளம்" அழகிய சிற்றம்பலக் கவிராயர் ஒரு புலவர் அழகிய மணவாளன் என்று அரங்கநாதர்க்குப் பெயர் சில வைணவ அன்பர்கள்"அழகிய மணவாளதாசன்"என்று பெயர் பெற்றனர்.

நாச்சி-நாச்சியார்:
தமிழில் பீடும் பெருமையும் மிக்க உயர்வான ஒரு சொல்'நாச்சி' என்பது.பழந்தமிழ் அகராதி நூல்களான நிகண்டுகள் நாச்சி என்ற சொல்லுக்குத் 'தலைவா' என்று பொருள் கூற்கின்றன.நாயகன் அல்லது நாயன் என்ற ஆண்பால் சொல்லுக்கு உரிய பெண்பாற் பெயர் நாச்சி என்பதாகும்.

சிவபெருமான் தேவியான பார்வதிக்கு 'நாச்சி'என்ற பெயர் உண்டு. சிவன் கோயிலில் அம்மன் சன்னதியில் விளக்கு வைத்ததைக் கல்வெட்டு "நாச்சியார்க்கு வைத்த விளக்கு என்று கூறுகிறது.திருமாலின் தேவியரான சீதேவி-பூதேவி இருவரையும் நாச்சியார் என்று அழைத்துள்ளனர்.திருவரங்கம் கல்வெட்டு "மணவாளப் பெருமானையும் இரு நாச்சியாரையும் எழுந்தருள்வித்தேன்"என்று கூறுகிறது.

கோவை மாவட்டம் ஆனைமலை சோமேசர் கோயில்கல்வெட்டில் அம்மன் திரூருவத்தை எழுந்தருளச்செய்த ஒருவர் "திருக்காமக்கோட்ட நாச்சியார் பெற்ற நாச்சியாரைப் பிரதிட்டை செய்தேன்"என்று கூறுகிறார்.நடராசப் பெருமான் செப்புப் ப்டிமம் செய்தால் அவருடன் சிவகாமி அம்மையாரையும்செய்தளிக்க வேண்டும். கோவை மாவட்டம் கடத்தூர்க் கல்வெட்டில் 'நித்தம் நின்றாடுவாராகிய கூத்தம் பெருமானையும் நாச்சியாரையும் செய்வித்தேன்" என்ற தொடர் காணப்படுகிறது.

முருகப் பெருமான் தேவியரான வள்ளி-தெய்வானை ஆகியோரும் நாச்சியார் என்று குறிக்கப்பட்டுள்ளனர்"இளைய பிள்ளையாரையும் நாச்சியார் இருவரையும் எழுந்தருளச் செய்தேன் ' என்பது ஒரு கல்வெட்டு தொடர்.

இறைத் திருமேனிகள் மட்டுமல்ல சமய அடியார்களும் நாச்சி-நாச்சியார் பெயர் பெற்றுள்ளனர்.சுந்தரர் தேவியராகிய பரவையார் 'பரவை நாச்சியார்'எனப்படுவார்.ஆண்டாள் இயற்றிய பாடல் தொகுதிகள் நாச்சியார் திருமொழி எனப்படுகிறது.

தமிழக அரசர்களின் தேவியரும் நாச்சியார் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.'குந்தவை நாச்சியார்',பஞ்சவன் மாதேவி நாச்சியார்' என்பன சோழ அரசியர் பெயர்கள்.சிவகங்கையில் வெள்ளையரை எதிர்த்த அரசி பெயர் "வேலுநாச்சியார்"இராமநாதபுரம் அரசி ஒருவர் பெய மங்களேஸ்வரி நாச்சியார்.

இத்தகு சிறப்புப் பெயரை ஆண்களும் பெற்றுள்ளாது மிகுந்த சிறப்புக்கு உரியதாகும். நாச்சிமுத்து,நாச்சியப்பன் என்ற பெயர்களைக் காணலாம்.

இத்தகு பன்முக மரட்சியுடைய பல்வேறு சிறப்புக்கள் கருதியே வள்ளியறச்சல் காணியாளர்கள் தம் வாழ் முதலாகிய குலதெய்வத்திற்கும் "பொன்னழகு நாச்சியம்மன்" என்ற சிறப்புப் பெயர் வைத்துள்ளனர்.

வள்ளியறச்சல்
'தீங்கிலாத கங்காகுல நாட்டார்
செழிக்கும் நாடு'
என்று புகழப்பட்ட தொன்மைமிகு காங்கயநாட்டின் பதினான்கு பழம்பதிகளில் இரண்டாவதாக விளங்கும் பெருமையுடையது வள்ளியறச்சல்.வரலாற்றுச்ன் சிறப்பும்,இலக்கியப் பெருமையும்,புராண ஐதீகமும் கொண்ட பேரூர் வீரத்தின் விளைநிளமான ஊர், கொங்கு மண்டலத்தின் பெருமைமிகு ஊர்களில் ஒன்று.

பெயர் பெற்ற பேறு
கலியுகத் தொடக்கத்தில் 'வள்ளியம்மை முருகனை மணம்புரிய வேண்டி அறச்சாலை அமைத்துப் பூக்களால் சிவபெருமானைஅர்ச்சனை செய்த தலம்' ஆகையால் இவ்வூர் 'வள்ளியறச்சாலை'என்ற பெயர் ஏற்பட்டுப் பின் வள்ளியறச்சலாக மாறியது என்பர்.

சில ஆவணங்களில் இவ்வூர்'வள்ளியிறைச்சல்' 'வள்ளியிறச்சல்' எனவும் எழுதப்பட்டுள்ளது. திருப்பூர் க.பழனிசாமிப் புலவர் 'வள்ளியரயம்'என்பதே இவ்வூரின் பழம் பெயர் என்பார்.'வள்ளி' என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது.ஏடு பெயர்த்து எழுதுவோர் 'வல்லி' என்றும் எழுதினர்.'வள்ளிமாநகர்' எனவும் வழங்கியது.

புராதண காலத்தில் வனங்கள் ஆகிய காடுகளே மிக அதிகமாக இருந்தன.மன்னர்கள் 'காடு கொன்று நாடு ஆக்கிக் குளம் தொட்டு வனம் பெருக்கிக் கோயில் கட்டிக் குடிமக்களை அமர்தினர்.

அவ்வகையில் இவ்வூர்ப் பகுதி ஊஞ்ச வனம்,மதளை வனம்,சுகந்த வனம்,சூதக வனம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது.இங்கு அமைந்த இவ்வூருக்கு ஞானபுரி,மங்கள புரி,சொர்னபுரம்,செளந்தர்யபுரம் என்ற பெயர்கள் ஏற்ப்பட்டன.நான்கு யுகங்களில் பெற்ற பெயர் .

காணிப்படல்களில் 'வள்ளியறச்சலூர்''வள்ளிநகர்'என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

புலவர்கள் புகழும் ஊர்:
புலவர்கள் இவ்வூரின் பன்முக மாட்சிகளுக்கு ஏற்பப் பலவாறு புகழ்ந்துரைத்துள்ளனர்.
'தேவர்கள் புகழ்கின்ற வள்ளிநகர்'
'கன்னல் உயர் வள்ளிநகர்'
'ஆய ந்ற்புகழ் வள்ளிநகர்'
'செல்வம் மிகும் வள்ளிநகர்'
'அல்லி வாவிசூழ் வள்ளிநகர்'
'திறமான வள்ளிநகர்'
'அணியுலாம் திரு வள்ளிநகர்'
என்பன புலவர் பெருமக்களின் புகழ்மொழிகளாகும்.

செல்வ வளமிக்க வள்ளியறச்சலில் கால்நடைச் செல்வமும் குறைவின்றி இருந்தன. அக்கால்நடைச் செல்வத்தால் பெற்ற பெயர் எனக் கீழ்வருமாறு கூறுவர்.

முன்பு நிலையான ஊரும் ,வேளாண்மைத் தொழிலும் அமையாத காலத்தில் மக்கள் கொங்கு நாட்டில் கால்நடைச் செல்வங்களைப் பெற்று வாழ்ந்தனர்.ஒரு பகுதியில் கால்நடைகளை மேய்த்துச் சில காலம் தங்குவர், பின் வேறோரு பகுதிக்குச் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். அப்போது முன்பு இருந்த பகுதியில் இருந்த சாணக்குவியலுக்கு நெருப்பு மூட்டிச் செல்வர்.அத்தகு பகுதிகட்கு செலக்கெரிச்சல்,புத்தெரிச்சல்,நெருப்பெரிச்சலெரிச்சில் பொழிய்வாய்ச்சி என்றெல்லம் பெயர்கள் ஏற்பட்டன.அவ்வகையில் இங்கு வள்ளிஎரிச்சல் என்று பெயர் ஏற்பட்டது.இப்பெயரே காலப் போக்கில் வள்ளியறச்சலாக மாறியது என்றும் சில அய்வாளர்கள் கூறுவர்.

வீரபாண்டிய நல்லூர்
நல்லூர் என்று பெயர் அமைந்த ஊர்கள் எல்லாம் சமயச் சிறப்பு வாய்ந்த கோயிலுக்குக் கொடையாக அறிவிக்கப்பட்ட ஊர்களாகும். அவை பெரும்பாலும் அரசர்,அரசியர்,தலைவர்கள் பெயரால் அமைந்திருக்கும் .ராசேந்திர நல்லூர்,குலசேகர நல்லூர் என்பன அவற்றுட் சில.கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வள்ளியறச்சலின் ஒரு பகுதிக்கு 'வீரபாண்டிய நல்லூர்' என்று பெயர் அளிக்கப்பட்டது.இப்பகுதியில் உள்ள 'நல்லூர்ப்பாளையம்'அப்பழம் பெயரை நினைவூட்டுகிறது.

சேரர் தொடர்பால் பெற்ற பெயர் - மாந்தபுரம்(மாந்தை)
சேரன் மகனைச் சோழன் மகள் மணம்புரிந்தாள்.சேரனும் சோழனும் உறவினர் ஆனபின் சேலம்,கருவூர்,தாராபுரம்,மூலனூர்,விளங்கில் ஆகிய ஊர்களில் சேரன் பகுதியில் வேளாளர் தலைவர்களான எழினி,கோவன், திதியன்,மையூரன்,பொருநன் ஆகியோர்கள் நிருவாகிகளாக நியமிக்கப்பட்டனர்.ஏற்கனவே அங்கு நிர்வாகம் செய்தவர்கள் பதவிகளை இழந்து பாண்டியனிடம் முறையிட்டனர்.

பாண்டியன் சேரன் மீது படையெடுத்தான்.சேரனோடு சோழன் படையும் இணைந்து போரிட்டது.போரில் மேற்கண்ட ஐந்து ஊர்த் தலைவர்களான வேளாளர் தலைவர்கள் ஐவரும் போரிட்டுச் சேரன் சோழன் படை வெற்றிபெறச் செய்தனர்.சோழன் ஐந்து வேளாளர் தலைவர்கட்கும் பல சிறப்புகளைச் செய்தான்.

சேரமன்னன் மாந்தரஞ்சேரப் இரும்பொறை வெற்றியின் அறிகுறியாக கொங்கு நாட்டின் நடு ஊரான வள்ளியறச்சலின் ஒரு பகுதியில் தன் பெயரால் மாந்தபுரம் என்ற ஊரை ஏற்படுத்தினான்.இலக்கிய வழக்கில் அவ்வூர் மாந்தை என்று புகழ்பெறும்.அங்கு ஐயன் பெயரில் ஒரு கோயில் கட்டி நாட்டராயன்கோயில் என்று பெயரிட்டான்.இதனை மாந்தரஞ்சேரப் மெய்க்கீர்த்தி

"தன்னரசை நிலைநிறுத்தித் தகுந்தநடு நிலம் ஆய்ந்து
தென்னவர்தம் பூமியினுள் திகழ்நலமாம் ஒரிடத்தில்
மாந்தையெனத் தன்னாமம் மருவஒரு நகர் அமைத்து
பாந்தமுடன் ஐயனெனும் பகர்சாத்தன் தளிஎடுத்து
நாட்டரயன் எனும்நாமம் நவின்றுதொழுது அவன்குறைதீர்
மோட்டுநலத் தொருபூதம் முழுநலத்தால் எழுவித்து
மந்திரநன் முறைமையினில் வருதெய்வத் திறல் பேணி
எந்திரசா தனம் முதல் இயற்றுவித்து நாட்டினார்க்கு
ஒரு குறையும் இல்லாது உறுதுயரம் நில்லாது
மாரிவள்ம் குறாஇயாது மனுநீதி தவறாது"
என்று கூறுகிறது

தீரன் சின்னமலைக்கு வள்ளியறச்சல் ஆதரவு:
வடதமிழ் நாட்டில் கொங்குப் பகுதியில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்து போராடியவர் தீரன் சின்னமலை என்று புகழப்பட்ட தீர்த்தகிரிச் சர்க்கரை.அவர் 18.4.1792 ஆம் ஆண்டு வீரர்கட்குப் போர்ப்பயிற்சி அளிக்கவும்,ஆயுதங்கள் தயார் செய்யவும் சிவன்மலை வடபுறம் உள்ள காட்டுப்பகுதியை பட்டாபி அனுமந்தக் கவுண்டர் என்பவரிடம்விலைக்கு வாங்கினார்.அந்த இடத்தை வாங்குவதற்கும்,பத்திரம் எழுதுவதற்கும் ஒரு சில பெருமக்கள் துணைபுரிந்தனர்.அவர்களில் ஒருவர் "வள்ளியறச்சல் நல்லண கவுண்டர்"என்பவர் ஒருவர்.

சமுதா ஒப்பந்தங்களில் வள்ளியறச்சல் ஊரார்:
கொங்கு பருத்திப்பள்ளி நாட்டுப் பருத்திப்பள்ளியில் கொங்கு மண்டல செல்லன் குலத்தார் அனைவரும் கூடித் தங்கள் மங்கள நிகழ்ச்சிகட்குப் பணிபுரிய வேளாளர் கூத்தாடி கந்தப்பட்டன் மகள் அத்திப்பெண் என்பவளைக் குல மாணிக்கியாக நியமனம் செய்தனர்.அந்த ஒப்பந்தத்தில் சாட்சிச் கையொப்பம் இட்டவர் 'காங்கய நாட்டு வள்ளியறச்சலில் அழகப்ப கவுண்டர்" என்பவர் ஒருவர்.

வாரக்க நாட்டில் பல்லடத்தை அடுத்துள்ளது நாரணாபுரம்.அங்காள பரமேசுவரி கோயிலுக்கும் ,பூசாரிக்கும் சில கொடைகள் அளிக்கப்பட்டது.அதற்காக எழுதப்பட்ட ஆவணத்தில் முன்னிலை வகித்துக் கையொப்பம் இட்டவர்கள் "வள்ளியறச்சல் ஆந்தைகுலம் மாரப்பகவுண்டர்,சின்னண கவுண்டர்,சுக்கிரமணியக்கவுண்டர் ஆகியோர் ஆவர்.

வள்ளியறச்சரார் பெற்ற புதுக்காணி
பிடாரியூர் பொருளந்தை குலம் பள்ளிகூடத்தான் குழந்தை வேலப்பகவுண்டர் வழிவந்த செங்கோடகவுண்டரின் பெண் வெள்ளை வேலம்மாளை வள்ளியறச்சல் ஆந்தைகுல சென்னிமலைக் கவுண்டன் மகன் குமரவேலப்பகவுண்டர் மணம் செய்து கொண்டு பிடாரியூரிலே காணியுரிமை பெற்றார்.

தென்னிலைக் கொங்கராயனுடன் முதல் போர்:
பூந்துறை நாடு,காங்கயநாடு,தென்கரை நாட்டுப் பகுதியில் மக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த வெங்கச்சி வேட்டுவர் தலைவன் கொங்கராயனை வென்று அழகன் சர்க்கரை நந்தக் காரையூர்க் காணி ப்ற்றதாகச் செப்பேடு கூறுகிறது.

கொங்கராயனுடன் முதலில் எதிர்த்துப் போராடி அவன் வலிமையைக் குறைத்து அவன் படைகள் பெரும் பகுதியை அழித்து மொஞ்சனுர்க் குளத்தருகே வீரமரணம் அடைந்தவர்கள் மூவர்
1.வள்ளியறச்சல் பில்லகுலத் தொண்டைமான் மன்றாடியார் மகன் மாந்தியப்பன்
2.நத்தக்காரையூர் மணியன் குல ராவுத்தக்கவுண்டர் மகன் வாரணவாசிக்கவுண்டர்
3.வள்ளியறச்சல் காவல் பெரியதம்பிக்கவுண்டர் மகன் பெரியணகவுண்டர்
என்பவர் ஆவர்.இறுதிப் போரிலும் கொங்குராயனை வென்று அவன் தலையைக் கொய்த பெருமை வள்ளியறச்சல் பில்லகுலத் தொண்டைமாண் கவுண்டருக்கே உண்டு.
வள்ளியறச்சலில் சேரன் பள்ளிப்படை
வள்ளியறச்சலில் மாந்தீசுவரர் சிவன்கோயில் இல்லாமல் மாந்தீசுவரர் பெயரில் ஒரு கோயிலும் உள்ளது.அது மாந்தபுரத்தை ஏற்படுத்தி மாந்தரஞ் சேரனின் பள்ளிபடைக் கோயிலாக இருக்கக் கூடும்.

வள்ளியறச்சாரர் பெற்ற புதுக்காணி வள்ளியறச்சல் ஆந்தை குலத்தார் தென்கரை நாட்டில் குடியெறி வள்ளியறச்சல் மாந்தீசுவரர் கோயிலிருந்து பிடிமண் எடுத்துக் கொண்டு சென்று சிவாலயம் கட்டி மாந்தீசுவரர் என்று பெயரிட்டனர்.ஏற்படுத்திய ஊருக்கு எதிரனூர் என்று பெயரிட்டனர். எதிரனூருக்கு மாம்பாடி என்ற வேறு பெயரும் உண்டு. "வேதப் பொருளாய் விளங்கும் மரகதத்தாய்
மாதுபா கத்திலகும் மாந்தீசர் - பாதமலர்
தாங்கித் தமிழ்மொழியைச் சாற்றிய நல் ஆந்தைகுலம்
ஓங்கிவளர் மாம்பாடி யூர்"
என்பது எதிரனூர் - மாம்பாடிக் காணிப்பாடலாகும்.

பொன்னழகு நாச்சியம்மன்
பஞ்சரத்தினம்

பொன் அழகு நாச்சியம்மன் மீது ஐந்து பாடல்கள் அடங்கிய 'பஞ்சரத்தினம்' என்ற இலக்கியம் பாடப்பட்டு அச்சாகியுள்ளது.

மணியு லாநெடு மாடங்கள் மாளிகை
மாதர் மக்கள் ம்ருவிய சுற்றமும் திணியு லாவுநல் வச்சிர தேகமும்
செப்பும் மற்றுள செல்வமும் சேருமால்
பணியு லாமொளிர் பூஷண வர்த்தணி
பரம லோசனி பாக்கிய சாலினி
அணியு லாம்திரு வள்ளி யரசலில்
அழக நாச்சியென் அம்மையப் போற்றவே!

நோயும் வெங்கலிப் பேயும்வந் தென்செயும்
நொய்ய காலனார் நோக்கந்தான் என் செயும்
ஏயும் நல்வினை தீவினை என் செயும்
இன்பம் என்செயும் துன்பந்தான் என்செயும்
காயும் சந்திர சேகரனார்நெற்றிக்
கண்ணனார்மகிழ் காதலி மாதங்கி
ஆயும் மெய்யடி யார்கட்குத் தாயாகி
அழக நாச்சியென் அம்மையைப் போற்றவே

பில்லி சூனியம் பேய்முனி காட்டேரி
பெரிய கோடன் பிணம் உண்ணிக் காடன்மா
வில்லி மாடன் கறுப்பன் இருளன்பேர்
மிண்டன் முண்டி சாமுண்டி கால்நொண்டிவாழ்
சுல்லி கொல்லி சுணங்கன் கணாங்களைத்
தூர ஓட்டித் துரத்தலாம் என்றென்றும்
அல்லி வாவிசூழ் வள்ளி யரசலில்
அழக நாச்சியென் அம்மையைப் போற்றவே

இல்லை என்றே எளிய முகத்தினை
இனிய பல்லை வயிற்றினைக் காட்டியே
புல்லர் தங்க ளிடத்தில் ஏற் காமலும்
நல்ல செல்வமும் கல்வியும் ஞானமும்
ஞாலம் மீதினில் நாம்பெற லாகுமால்
அல்லை மேக நிறத்தை அழிக்கும்வார்
அழக நாச்சியென் அம்மையைப் போற்றவே

காயம் மீது வெண்ணீறு பொற்கண்டிகைக்
கலன் அணிந்து விழவினில் ஆனந்தத்
தூய நீர்வழிந் தோடநின் மந்திரம்
சொல்லி நின்னைத் துதிக்க அருள்செய்வாய்
பாயும் நீர்வளம் மிக்கு விளங்கிநெல்
பண்ணை தோறும் பயிர்கள் செழிக்கவே
ஆய நற்புகழ் வள்ளி யரசலில்
அழக நாச்சியென் அம்மைநீ இம்மையே.