மாந்தீசுவரர் கோயிலில் சோழர்,பாண்டியர்,விசயநகர மன்னர் காலத்தில் கொடையளிக்கப்பட்ட பத்து கல்வெட்டுக்கள் உள்ளன.ஒரு கல்வெட்டு மக்கென்சி ஆவணத்தில் உள்ளது.மற்ற ஒன்பது கல்வெட்டுக்களும் மத்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் சென்னைக் கல்வெட்டுப் பிரிவினர் படி எடுத்துள்ளனர்.

பாண்டியர் காலக் கல்வெட்டு
திரிபுவணச் சக்கரவர்திகள் ஸ்ரீ வீர பாண்டியன் காலத்தில் பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் வள்ளியறச்சாலை வேளாளர்கள் மாந்தீசுவரர்ன் அமுதுபடிக்கு மூன்று மாத்திரை நிலம் தாணம் அளித்ததைக் குறிக்கிறது.

சோழர் காலக் கல்வெட்டுக்கள்
மூன்று கல்வெட்டுக்கள் சோழர் காலக் கல்வெட்டுக்கள்.
அவை,
1.கோனாட்டான் வீரசோழப் பெருமானடிகள்
2.கோப்பரகெசரி விக்கிரம சோழ தேவர்
3.வீர ராசேந்திர தேவன்
காலத்தவை.

அவை வள்ளியறச்சல் ஊரவர் கொடை பற்றியும்,கணக்கர் குல கேசன் மூக்கன் என்பார் கொடுத்த கொடை பற்றியும் ,தனபாலன் என்பார் அளித்த கொடை பற்றியும் கூறுகின்றன.

கோனாட்டான் வீரசோழப் பெருமானடிகள் முதல் கொங்குச் சோழன் ஆவான். அவன் காலக் கல்வெட்டு வட்டெழுத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

விசய நகர அரசர் காலக் கல்வெட்டு
சுப கிருது வருடம் பங்குனி மாதம் 7-ஆம் தேதி அளித்த கொடை பற்றியது.பிற்பகுதி அழிந்து விட்டது.
அரசர் பெயர் குறிக்கப் பெறாத கல்வெட்டுக்கள்
ஐந்து கல்வெட்டுக்களில் அரசர் பெயர்கள் எதுவும் குறிக்கப் பெறவில்லை.

சித்தோட்டைச் சேர்ந்த காடைகுலப் பெருமகன் ஆடன் புளியன் ஆன உத்தமசோழத் தமிழ வேளான் கோயில் திருப்பணியின் போதுஅர்த்த மண்டபத் தூண் கொடையாக அளித்ததை ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.மற்றொரு கல்வெட்டில் அவன் மும்முடிச் சோழமாராயன் என்ற பட்டப் பெயருடன் குறிக்கப்பட்டுள்ளான்.

முத்தூர் மணிய குல பன்றன் மாராயனான் தென்னவன் மூவேந்த வேளான் அர்த்த மண்டபத்தூண் ஒன்று அளித்தை மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது.இருவரும் அரசரால் மாராயன்,மூவேந்த வேளான்,தமிழ வேளான்,மும்முடிச் சோழன் என்ற சிறப்புப் பட்டங்கள் பெற்ற உயர் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.

வள்ளியறச்சல் ஈசுவரன் கோயிலுக்கு மங்கல்யன் மோடன் பொதுவன் என்பவனுக்காக பொதுவம் பாவையும், பாவை படாரியும் ஒரு நந்தா விளக்கு வைத்ததை ஒரு கல்வெட்டு கூறுகிறது.

அம்மன் பெரிய நாயகியாகிய திருக்காமக் கோட்ட நாச்சியார்க்கு அமுதுபடிக்காக அரிசி வழங்கியதை ஒரு கல்வெட்டு கூறுகிறது.கல்வெட்டில் இறைவன் பெயர் மாந்தாளி ஈசுவரர் என்று குறிக்கப்பட்டுள்ளது.

மக்கென்சி ஆவணத்தில் "சிலா சாசனங்கள் ராசீகங்களிலே கல்லுச் சாசனங்கள் எழுதியிருக்கப்பட்ட கல்லுகள் ஒண்ணுக்கொண்ணு மாறாட்டமாகப் போயிருக்குது". என்று எழுதப்பட்டுள்ளது.செப்பெடுகளும்(தாமிர சாசனங்கள்) கோயிலில் இருந்துள்ளது.

கல்வெட்டுக்கள்
1.மாந்தீசுவரர் கோயில் அர்த்த மண்டபத் தூண்
'ஸ்வஸ்திஸ்ரீ சிற்றில்லோட்டில் லிருக்கும்
வெள்ளாளன் காடகளில் ஆடன
புளியநாந உத்தமசோழத் தமிழ
வேளாந் இட்ட கால்'

2.மாந்தீசுவரர் கோயில் அர்த்த மண்டபத் தூண்
'ஸ்வஸ்திஸ்ரீ முத்தூரிலிருக்கும் வெள்ளாளன் மணியர்களில் பந்றத் மாராயனான
தெந்நவன் மூவேந்தவேளான் இட்ட
கால்'

3.மாந்தீசுவரர் கோயில் அர்த்த மண்டபத் தூண்
'ஸ்வஸ்திஸ்ரீ சிற்றில்லோட்டிலிருக்கும்
வெள்ளாளன் காடகளில் ஆடன்
புளியநாந உத்தம சோழ மும்முடிச் சோழ மாராயன் இட்ட கால்'

4.மாந்தீசுவரர் கோயில் அர்த்த மண்டபம் இடப்பக்கம்
'ஸ்ரீவீரவிசைய பொக்கண உடையார்க்குச்
செல்லாநின்ற சுபகிறது வருஷத்துப்
பங்குனி மாதம் 7ந் தியதி'

5.மாந்தீசுவரர் கோயில் விதானக் கல்வெட்டு
'ஸ்வஸ்திஸ்ரீ கோனாட்டான் வீர சோழப்
பெருமானடிகளுக்குத் திருவெழுத்திட்டுச்
செல்லா நின்ற யாண்டு முப்பத்தெட்டாவது
வள்ளிஎறிச்சில் ஊரை'

6.மாந்தீசுவரர் கோயில் தனிக் கல்
'ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி ஸ்ரீ விக்கிரம சோழ
தேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற
திருநல்லியாண்டு பதினொன்றாவது
வள்ளிஎறிச்சில் வெள்ளாளன் கணக்கரில்
கேசன் மூக்கன்'

7.மாந்தீசுவரர் கோயில் நந்தி மண்டபம்
ஸ்வஸ்திஸ்ரீ கோ நாட்டான் வீர சோழ பன்ம
ர்க்கு திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற ஆண்டு
ஆறாவது இவ்வான்டு வள்ளி எறிச்சில் 'மாந்தாளி ஈஸ்வரத்து மகாதேவர்
வள்ளி எறிச்சில் மங்கல்யன் மோடன்
பொதுவனைச் சாத்தி பொதுவம்
பாவையும் பாவை பாடாரியும் ஒரு
நொந்தா விளக்கு எரிய வள்ளி எறிச்சில்
ஊரார் கைவழி வைத்த பொன்
காசேழேகால் பொன் பன்னிரு
கழஞ்சு இது காத்தான் அடி என்
தலை மேலிந'

8.மாந்தீசுவரர் கோயில் நந்தி மண்டபம்
'......ரிசியும் திருக்காமக் கோட்ட
நாச்சியார்க்கு உரிய நெல் அரிசி
ஆக நாழிஉரி அரிசியும் நெல்
அஞ்சிரண்டில்ப் படி அளிப்போமாகவும்
தங்களுக்கு படி படி'

9.மாந்தீசுவரர் கோயில் குமுதப் படை
ஸ்வஸ்திஸ்ரீ வீர இராசேந்திர தேவற்கு யாண்டு
பதின் அஞ்சாவது ...........தன் தநபாலனேன்
ஆளுடையார் மாந்தாளி ஈஸ்வர முடையார்

10.மாந்தீசுவரர் கோயில் சுப்பிரமணியர் கோயில் நிலைகால்
ஸ்வஸ்தி ஸ்ரீமன் மகா மண்டலீசுவரன் மகா
ராசகேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவர்திகள்
ஸ்ரீ வீரபாண்டிய தேவஏகு யாண்டு பனிரண்டாவது
வள்ளியறசாலையில் வெள்ளாளர்கள்
மாந்தீசுவரம் உடையார்க்கு அமுதுபடிக்கு
மூன்று மாத்திரை பூமி கொடுத்தோம் இது
பன்மாகேஸ்வரர் ரட்சை.